பயணிகள் எண்ணிக்கை குறைவு மற்றும் விமானிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 4-ம் தேதி அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
ஓடுபாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்ட பின்னர், நிலைமை ஓரளவு சீரானதும் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஆனாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்பட்டன. புறப்பாடு மற்றும் வருகையில் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்றும் போதிய பயணிகள் இல்லாததாலும், விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் வராததாலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய 11 விமானங்களும் என மொத்தம் 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் சிலர் பணிக்கு வரவில்லை. வேறு சிலர் தாமதமாக வந்தனர். மேலும், பயணிகள் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
இதனால், காலையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால் மாலையில் இருந்து வழக்கமான சேவைகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.