சமீபத்தில் டிமாண்ட்டி காலனி’ என்ற சூப்பர் ஹிட் பேய்ப்படத்தை கொடுத்த அருள்நிதி, அடுத்ததாக தான் நடித்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்தை வரும் ஜூன் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் உறுதி செய்துள்ளார்.

இதே தினத்தில் தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ திரைப்படத்தையும் இதே நாளில் ரிலீஸ் செய்ய சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த மூன்று படங்களை தவிர விமல், சமுத்திரக்கனி நடித்த ‘காவல்’ திரைப்படத்தையும் ஜூன் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளர் முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே ஜூன்19ஆம் தேதி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே காத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

English Summary: Arulnidhi’s Film going to clash with national Award Winning Film on 3rd week of June.