கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் சேர்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மற்ற பிரிவுகளை விட மாணவர்கள் கணிதம், உயிரியல் பிரிவில் சேர்ந்து படிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கணிதத்தை அடுத்து வணிகக் கணிதப் பிரிவில் சேருவதற்கும் மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் கூறும்போது, ‘கடந்த ஆண்டு சில பள்ளிகளில் கணிதம், உயிரியல் பிரிவில் மாணவர்களைச் சேர்க்க 450 மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் இந்த பிரிவில் சேர விருப்பம் கோரியுள்ளதால் இந்த மதிப்பெண்ணைகளையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிளஸ் 1 கணிதம், உயிரியல் பிரிவை எவ்வளவு பேர் கோருகின்றனர் என்பதைப் பொருத்து அந்தப் பிரிவில் மாணவர் சேர்க்கை அமையும் என்று கூறினார்.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வகுப்பில் மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Since classes for +1 starts in June 15th students are selecting biology group when compared to other groups.