பொது இடத்தில் புகை பிடிப்பதால் புகை பிடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புகைப்பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம் என அரசு அறிவித்து அதற்கான அபராதமும் காவல்துறையினர் வசூலித்து வந்தாலும் இன்னும் ஒருசிலர் பொது இடத்தில் புகை பிடிப்பதை நிறுத்துவதில்லை. இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவர தற்போது புதிய அப்ளிகேஷன் ஒன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று உலக புகையிலை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், சென்னையில் தேசிய புகையிலை ஒழிப்புக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “டொபாக்கோ மானிட்டர்” (Tobacco Monitor) என்ற அப்ளிகேஷனை பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் செய்தியாளர்களிடம் கூறியது: புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்படுகின்றன. இதனால், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை, புகையிலை பொருள்களின் மீது பாதிப்புகளை விளக்கும் வகையில் எச்சரிக்கை படங்கள், 18 வயதுக்கு உள்பட்டோர், பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனைக்குத் தடை போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

ஆனால் இந்தச் சட்டங்கள் பல்வேறு இடங்களில் மீறப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தப் புதிய அப்ளிகேஷனை இந்தியாவிலேயே முதல் முறையாக உருவாக்கியுள்ளோம். இதனை “கூகுள் பிளே ஸ்டோர்’-லிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியின் மூலம் புகையிலைப் பொருள்கள் தொடர்பான விதிமீறல் குறித்த புகார்கள், புகைப்படங்கள் போன்றவற்றை எங்கள் அமைப்புக்கு அனுப்பலாம்.

அந்தப் புகார்கள் எங்கள் அமைப்பின் மூலம் மாநில புகையிலை கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறை, கல்வித் துறை போன்ற துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எங்கள் அமைப்பு தொடர்ந்து கண்காணிக்கும். அதேநேரத்தில் புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்”

English Summary : Introducing New Apps to find and complaint on people smoking in public places.