சென்னையை அடுத்த சேலையூர் என்ற பகுதியில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று முதல் தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்வு செய்து வருகின்றனர்.
பாரத் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். பொன்னவைக்கோ, “பள்ளிக் கல்வி மூலம் பெற்ற அடிப்படை அறிவாற்றலை மாணவர்கள் மேம்படுத்தி, தங்களது உயர் தொழில்நுட்பக் கல்வி பெறும் தகுதியை மேலும் அதிகரித்துக் கொள்ளும் வகையில் ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இங்கு உயர் தொழில்நுட்பக் கல்வியுடன் ஆய்வுத் திறனையும் மேம்படுத்த 33 ஆய்வு பரிசோதனைக் கூடங்களும், இதர மாணவர்களுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 11 ஆய்வு மையங்களும் உள்ளன. பொறியியல் தொழில்நுட்பக் கல்வியைச் சார்ந்துள்ள மருத்துவ உபகரணங்கள், கருவிகள், சாதனங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை, முயற்சிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்களையும் ஊக்குவிக்கத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி சிட்டோஜி தான்மயி, 2-ஆவது இடம் பெற்ற மாணவர் மட்டா சைதன்யா, 3-ஆவது இடம் பெற்ற மாணவர் அட்டுக்குரி அவிநாஷ் ஆகியோருக்கு இலவச மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். பொன்னவைக்கோ வழங்கினார்.
English Summary: Counselling Started for Admissions in Bharath University.