தற்கால சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் இணைப்புகள் இல்லாதாவர்களே இல்லை என்ற நிலை ஆகிவிட்டது. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் மொபைல்போன் மூலம்தான் பெரும்பாலான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இண்டர்நெட்டுடன் கூடிய மொபைல்போன் பயன்படுத்தும் சென்னைவாசிகளுக்கு உதவும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வை-பை வசதியை விரைவில் ஏற்படுத்த சிஎம்டிஏ அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வை-பை வசதிகள் இருப்பதால் ரயில் பயணிகளுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கின்றது. அதேபோல் பஸ் பயணிகளும் இந்த வசதியை பெறும் நோக்கத்தில் வை-பை அமைக்கப்பட இருக்கின்றது.

இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வை–பை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் (சி.எம்.டி.ஏ.) எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தனியார் நிறுவனம் மூலம் இந்த வை-பை வசதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த வசதியை அறிமுகம் செய்வதன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தும் பயணிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி பிற நகரங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு மின்சார ரெயில் சேவை, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மற்றும் விமான சேவையின் நேரங்கள் பற்றிய தகவல்கள் வை-பை வசதியின் மூலம் தங்கு தடையின்றி கிடைக்கும். முதலில் இந்த வசதி இலவசமாகவும் பின்னர் பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறினர்.

கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் 20 இடங்களில் வை-பை வசதி செய்யப்படுகிறது. இதற்கான பரிசோதனைகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்த வாரத்திற்குள் பயணிகளுக்கு கிடைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடக்கின்றன. இவ்வசதி பஸ் நிலையத்தில் கிடைப்பது குறித்த விளம்பர பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Wifi is available in Chennai Koyambedu Bus Stand.