சமீபத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அந்நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டபூர்வமாக்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, ‘சென்னை வானவில்-சுயமரியாதை விழா-2015’ ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற தலைப்பில் நேற்று விழா மற்றும் பேரணி நடந்தது.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் தமிழ்நாடு வானவில் கூட்டணி அமைப்பை சேர்ந்த சிவா, ஜெயா, விக்ரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் திருநங்கைகளும் ஆர்வத்துடன் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பேரணி குறித்து அந்த அமைப்பை சேர்ந்த சிவா என்பவர் கூறியதாவது: மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்டவர்களை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ‘சென்னை வானவில்-சுயமரியாதை விழா’ என்ற தலைப்பில் இந்த பேரணியை நடத்தி இருக்கிறோம்.
எங்கள் சுயமரியாதை மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் உரிமைகளுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு இடர்பாடாக இருக்கிறது. அதை மாற்றி அமைக்க வேண்டும். நம் நாட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுள் சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியில் பாலியல் மற்றும் பாலின அடையாளங்களை பற்றிய விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். மேலும் மாற்று பாலியல் மற்றும் பாலின மாணவர்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி கிண்டல், கேலி அல்லது பாலியல் குறும்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை இதன் மூலம் வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.
இந்த பேரணியில் பெங்களூர், டெல்லி, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Homosexuals rally took place in Chennai requesting their 6 demands.