பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த மாணவ மாணவிகள் பெரிதும் எதிர்பார்த்த பொறியியல் பொது கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது. சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கும் இந்த கவுன்சிலிங்கிற்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பான முறையில் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 54 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியானது.

முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் கடந்த ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த கவுன்சிலிங் நிறைவில் அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று முதல் தொடங்குகிறது. கவுன்சிலிங் தேதி, நேரம் ஆகிய விவரங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டின் போதே மாணவர்களுக்கு ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கவுன்சிலிங் அழைப்புக் கடிதமும் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டுவிட்டது. வெளியூர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்ல அரசு பேருந்துகளில் கட்டணச் சலுகை பெறவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கவுன்சிலிங் வரும் வெளியூர் மாணவ-மாணவிகளுக்கும் உடன் துணைக்கு வருவோருக்கும் தேவையான அடிப்படை வசதிகளும், கேன்டீன், குடிநீர் வசதி, இளைப்பாற ஓய்வுக் கூடம் ஆகிய அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலிங் போது டெபாசிட் பணம் செலுத்துவதற்கு வங்கி கவுன்ட்டர்களும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள காட்சிக்கூட அறையில் ராட்சத கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று தொடங்கும் இந்த கவுன்சிலிங் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறும் பொது கவுன்சிலிங்கில் தினமும் 6 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்கிறார்கள். கவுன்சிலிங் ஒவ்வொரு நாளும் 8 அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது.

English Summary : First general counseling for Engineering starts today in Anna University. This Counselling will take place till July 31st.