சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திருமங்கலம்-எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் ரெயில் தண்டவாளம் மற்றும் சிக்னல் அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என்றும், அடுத்தகட்ட மெட்ரோ சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கப்பாதை 24 கிலோ மீட்டர் தூரமும், உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் 21 கிலோமீட்டர் தூரமும் பணிகள் நடந்து வருகிறது.
மொத்த தூரத்தில் 55 சதவீதம் சுரங்கப்பாதையாகும். மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் பணியில், தரைக்குமேல் 16 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 16 ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் உதவியுடன் சென்னையில் 5 கட்டமாக நடந்து வரும் சுரங்கம் தோண்டும் பணியில், முதல்கட்டமாக திருமங்கலம்-அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு – செனாய் நகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 பாதையிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்தேதி நிறைவடைந்தது.
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கோயம்பேடு, திருமங்கலம், செனாய்நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூருக்கு ரெயில் இயக்குவதற்கான போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் தண்டவாளம், அவசரகால வழி மற்றும் மின்சார உபகரணங்கள் பொருத்துதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
ஷெனாய் நகர் முதல் திருமங்கலம் வரை உள்ள 2 ஆயிரத்து 797 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து அங்கு தண்டவாளமும் அமைக்கப்பட்டு விட்டது. ஓரிரு மாதங்களில் இப்பாதையில் சிக்னல்கள் அமைக்கும் பணி தொடங்கவிருக்கிறது. இதற்கான கருவிகள் தற்போது வரவழைக்கப்பட்டு உள்ளன.
ஆலந்தூர்- கிண்டி- சின்னமலை வரை உயர்த்தப்பட்ட பாதைக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்தப்பாதையில் தற்போது மின்கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப்பாதையில் 108 மின்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டதில் தற்போது வரை சுமார் 85 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சின்னமலை முதல் சுரங்கப்பாதை தொடங்குவதால் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் இந்தப்பணிகள் முற்றிலும் நிறைவடைய உள்ளன. அதற்கு பிறகு ஆலந்தூர்- கிண்டி மெட்ரோ- சின்னமலை இடையே ரெயில்கள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளன.
English Summary: Chennai Metro Rail- Chennai Egmore-Thirumangalam (Tunnels work) underground station and lines work going in Quick Process.