metro_startசென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் 30-ந் தேதி முதல் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு ரெயில் சேவை நடந்து வருகிறது. சென்னை நகர் மக்களின் பேராதவை பெற்று இந்த மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட மெட்ரோ ரயில் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரை (கோயம்பேடு வழியாக) 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுரங்கப்பாதையில் 16 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரெயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 32 ரெயில் நிலையங்கள்அமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் இரவுபகலாக துரிதமாக நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான முதல் கட்ட மெட்ரோ ரயிலை தொடர்ந்து 2-வது கட்டமாக 2-வது வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையிலான மேல்மட்ட பாதைக்கான பணிகள் தற்போது முற்றிலும் முடிவடைந்துள்ளன. இந்தப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தி, பொதுமக்களுக்கான சேவையை தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு – ஆலந்தூரை தொடர்ந்து தற்போது பரங்கிமலை – ஆலந்தூர் மேல்மட்ட பாதைக்கான பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டன. இந்தப்பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்காக பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வதற்காக, இந்தப்பாதை குறித்து ஆவணங்கள் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று, பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் தன்னுடைய குழுவினருடன் நேற்று (16-08-2015) காலை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரை உள்ள 1.5 கிலோ மீட்டர் அதாவது 1,500 மீட்டர் நீளம் கொண்ட மேல்மட்ட பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றாது. இதில் பாதுகாப்பு ஆணையர் தன்னுடைய குழுவினருடன் சென்று தண்டவாள அமைப்பு, சிக்னல், ரெயில் நிலையம், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கும், ரெயில்வே துறைக்கும் அனுப்ப உள்ளார். பின்னர் இதனை பரிசீலித்து மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் பரங்கிமலை – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்க அனுமதியை மத்திய அரசு ஒப்புதலுடன் அளிக்கும். இந்த அனுமதியை தொடர்ந்து பரங்கிமலை – ஆலந்தூர் இடையே ரெயில் சேவை வரும் செப்டம்பர் மாதம் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பரங்கிமலை வரை இயக்கப்பட்டால் கூடுதல் பயணிகள் மெட்ரோ ரெயிலை அணுக வாய்ப்பு ஏற்படும். தாம்பரம் – கடற்கரை மின்சார ரெயிலில் பயணம் செய்வோர் பரங்கிமலையில் இறங்கி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வழிபிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Since Septemper St.Thomas Mount to Aalanthur Metro Train.Authorities Information.