பல வெளிநாடுகளில் கார்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருவதை தவிர்க்க கார்கள் இல்லாத நாள் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறையை சென்னையிலும் ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல்முறையாக கார்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்ற கருப்பொருளுடன் ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற நிகழ்ச்சியை வரும் அக்டோபர் 11ஆம் தேதி நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

உலகில் மக்கள் தொகைக்கு இணையாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெருமாபாலான சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. அதிகப்படியான வாகன பெருக்கத்தால் மக்களின் உடல் இயக்கம் குறைந்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபகாலமாக வெளி நாடுகளில் கார்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்ற நிகழ்ச்சி பிரபலமடைந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவைச் சேர்ந்த போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை நிறுவனம் (ஐடிடிபி) நடத்தி வருகிறது.

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி தமிழகத்தில் முதல்முறையாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் நடத்தப்பட்டது. கோவையை தொடர்ந்து தற்போது சென்னையிலும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஐடிடிபி ஆகியவை இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐடிடிபி நிறுவனத்தின் ‘நம்ம சென்னை நமக்கே’ திட்ட மேலாளர் அஸ்வதி திலீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் காலி இடம் என்பதே குறைந்துவிட்டது. சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை மீட்டெடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கார்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்ற கருப்பொருளுடன் ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த இருக்கிறோம்.

அக்டோபரில் இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஒரு கிலோ மீட்டர் நீள சாலை தேர்வு செய்யப்பட்டு, அங்கு போக்குவரத்து போலீஸார் உதவியுடன் மோட்டார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படும். சாலையில் பொதுமக்கள் குழந்தைகளுடன் விளையாடலாம். நடை பயணம், சைக்கிள் பயணம் போகலாம். யோகா செய்யலாம். இதன்மூலம் மக்களின் உடல் இயக்கம் பெற்று ஆரோக்கியம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘இந்நிகழ்ச்சிக்கு பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை அக்டோபர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். காலை 6 முதல் 9 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இதில் கிடைக்கும் அனுபவம் மற்றும் வரவேற்பை பொறுத்து, அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் சாலையின் நீளம் அதிகரிக்கப்படும்’’ என்றார்.

English Summary : Car-free day in Besant Nagar was followed on October 11th.