ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச முதியோர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம்மை வளர்க்க பாடுபட்ட முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினம் சர்வதேச முதியோர் தினத்தை ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள குசலாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

‘தலைமுறையை ஒன்றி ணைக்க உதவுங்கள்’ என்ற பொருளை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த விழாவில் முதியோரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அவர்களை அரவணைத்து அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில் முதியோர்களுக்கு குழு நடன போட்டி நடைபெற்றது. முதுமையின் மறு உருவம் குழந்தை என்று கூறிவரும் வகையில் நரை முடி, சுருக்கம் விழுந்த முகங்கள் என தோற்றத்தில் முதுமையாக இருந்தாலும், மனதளவில் குழந்தைகள் தான் என்பதை உணர்த்தும் வகையில் முதியோர் பலர் ஆடிப்பாடி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த விழாவில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பாரத மாதா, எம்.ஜி.ஆர்., ராஜராஜ சோழன், நரிக்குறவர் மற்றும் நாரதர் உள்பட பல்வேறு வேடங்களில் ஒய்யாரமாக மேடையில் வலம்வந்து அசத்தினர். தள்ளாடும் வயதிலும் குத்தாட்டம் போட்டு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். ராஜா-ராணி வேடம் தரித்து பழமையான பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

பார்வையாளர்களும் கைதட்டி, ஆரவாரம் செய்து அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். தொடர்ந்து சிறந்த தாத்தா-பாட்டி போட்டி நடைபெற்றது. இதில் கிராமத்து பாட்டி ஒருவர் ராகத்தோடு தாலாட்டு பாடினார். மாறுவேட போட்டி, சிறந்த தாத்தா-பாட்டி போட்டிகளில் முதல் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட கருவிகள் முதியோருக்கு வழங்கப்பட்டன.

விழாவில் முதியோர் இல்லங்கள், கருணை இல்லங்களில் இருந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற முதியோர் 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் வி.சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

English Summary : International older’s Day celebration in Chennai on October 1st.