chennai cityஇந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகிய சென்னை மாநகரை நவீன நகரமாக்கும் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. சென்னையை நவீன நகரமாக மாற்றுவது குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரை நவீன நகரமாக உருவாக்குவது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் சென்னையை நவீன நகரமாக உருவாக்குவது தொடர்பான கருத்துகள், பரிந்துரைகளை பொதுமக்கள் அளிக்கலாம்.

குடிநீர் வழங்கல், சுகாதார வசதிகள், தகவல் தொழில்நுட்பத் தீர்வு, கட்டமைப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்தும் கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் www.chennaicorporation.gov.in, www.mygov.in என்ற இணையதளங்களிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். மண்டல அலுவலகங்களில் உள்ள கருத்து கேட்புப் பெட்டிகளிலும் கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

இவ்வாறு சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Public opinion meeting to develop Chennai into Modern City was scheduled today.