இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களின் பட்டியலை எடுத்து அந்த நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் திட்டம் ஒன்றை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த வகையில் தற்போது 20 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றப்படும் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முதல் பட்டியலில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. புவனேஸ்வர், ஒடிசா
2. புணே, மகாராஷ்டிரா
3. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
4. சூரத், குஜராத்
5. கொச்சி, கேரளா
6. அகமதாபாத், குஜராத்
7. ஜபால்பூர், ராஜஸ்தான்
8. விசாகப்பட்டிணம், ஆந்திரம்
9. ஷோலாபூர், மகாராஷ்டிரா
10. தேவனகிரி, கர்நாடகம்
11. இந்தூர், மத்திய பிரதேசம்
12. புதுடெல்லி மாநகராட்சி
13. கோவை, தமிழ்நாடு
14. காகிநாடா, ஆந்திரம்
15. பெலாகவி, கர்நாடகம்
16. உதய்பூர், ராஜஸ்தான்
17. கவுகாத்தி, அஸாம்
18. சென்னை, தமிழ்நாடு
19. லூதியானா, பஞ்சாப்
20. போபால், மத்தியப் பிரதேசம்
ஸ்மார்ட் சிட்டி பெயர்களை அறிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இதுகுறித்து கூறும்போது, “98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ளன. இதில், முதல் 20 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்கள், போதுமான குடிநீர், மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, பொதுப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, மின் ஆளுமை, பொதுமக்கள் பங்களிப்பு என அனைத்துவித கட்டமைப்புகள் உடையதாக மேம்படுத்தப்படும்.
நாட்டில் 100 திறன்மிகு நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்ட 20 நகரங்களின் பெயர்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 40 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு அறிவிக்கும். நகர்ப்புற மேம்பாடு சவாலாக உள்ளது. நகர்ப்புறங்களில் தொடர்ந்து நிலவும் நேர்மை யின்மை, தேசிய பாதுகாப்புக்கு எதிராக உள்ளது. எனவே, அம்ருத், ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஸ்வச் பாரத், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) போன்ற திட்டங்கள் மூலம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் இளம் இந்தியாவுக்காக, நகர்ப்புறத்தை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது” என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை மற்றும் கோவை நீங்கலாக, இன்னும் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் இந்திய நகரங்கள் பட்டியலில் உள்ளதாகவும் அடுத்தடுத்த பட்டியலில் இந்த நகரங்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English summary: Chennai, Coimbatore and other 18 more cities are selected to change as “Smart Cities in India”, Central Government.