collectors28116தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கவனத்துடன் செய்து வருகிறது. இந்த தேர்தலுக்காக ஏற்கனவே புனேயில் இருந்து மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் சேலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 3வது கட்டமாக சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் இன்று பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை தாங்கினார்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் சுமூகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் இந்த பயிற்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தல் பணியில் புதிய தகவல் தொழில் நுட்ப மென்பொருள் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மின்னணு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் ஒவ்வொன்றிலும் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதனை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸ்காரர்களுக்கு தபால் ஓட்டுகள் 100 சதவீதம் பதிவு செய்யப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள தேர்தல் பணியாளர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுகளை பதிவு செய்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 66 ஆயிரம் வாக்கு சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடியில் மாற்று திறனாளிகள் எளிதாக சென்று வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது பெயர் இடம் பெற்று இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் நீக்கி கொள்வதற்கு வசதிகள் உள்ளன. அதனை பயன்படுத்தி பொது மக்களே தங்கள் பெயர்களை சரி பார்த்து நீக்கி கொள்ளலாம்.

இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்

English Summary: Consultation for the Chief Electoral Officer with district Collectors in Chennai.