உலககோப்பை டி-20 போட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருமா? வராதா? என்ற நிலையில் கடைசி கட்டத்தில் இந்தியா செல்ல பாகிஸ்தான் அரசு அந்நாட்டு அணிக்கு அனுமதி அளித்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தது.
இந்நிலையில் கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போன பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
” எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எந்த நாட்டிலும் கிடைத்ததில்லை ஏன் பாகிஸ்தானை விட இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது அலாதியான மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் கிடைத்த அன்பை ஒரு போதும் மறந்தது கிடையாது. மறக்கப் போவதும் இல்லை’ என்று கூறினார்.
பாகிஸ்தான் அரசு காலதாமதமாக அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அப்ரிடி, ”இங்கு அரசியல் பேச நான் வரவில்லை. நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை கிரிக்கெட் விளையாடவே இங்கு வந்திருக்கிறோம். அரசு எடுக்கும் முடிவை பின்பற்ற வேண்டியது எங்கள் கடமை ” என பதிலளித்தார்.
இந்திய பயணம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிஷ்ராவின் கணவருமான சோயப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியபோது “பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு எங்களது நன்றி. எனது மனைவி கூட இந்திய பெண்தான். இதனால் அடிக்கடி இந்திய வந்து சொல்கிறேன். இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தாக ஒரு போதும் நான் கருதியது இல்லை. இருந்தது இல்லை. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே மொழியைத்தான் பேசுகின்றனர். பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் உணரவில்லை. இந்திய வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி’ என்று கூறினார்.