Chief_Election_Commissionerதமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தயார் செய்வதில் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தங்களை பற்றி தவறான தகவல் ஏதாவது தந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு  தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பரிந்துரை செய்துள்ளார்.

ஐதராபாத் நகரில் 12-வது வருடாந்திர தேர்தல், அரசியல் சீர்திருத்த தேசிய மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது:

தேர்தல்களில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தங்களது முன்வரலாறு, குற்றப்பின்னணி உள்ளிட்டவை குறித்த எல்லா தகவல்களையும் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளை செய்து வந்துள்ளோம்.

வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்த முழுமையான தகவல்களை தெரிவிக்காவிட்டால் அல்லது எதையாவது மறைத்துவிட்டால் வாக்காளர்களுக்கு அவர்களைப்பற்றிய அரைகுறை உண்மைகள்தான் தெரியவரும். இது தீங்காகி விடும்.

எனவே இந்த ஓட்டையை அடைப்பதற்கு ஏற்ற வகையில், பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் தகவல்களை மறைத்தால் அல்லது தவறான தகவல் தந்தால் அதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும். அதற்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்த சிபாரிசை சட்ட கமிஷனும் வழிமொழிந்துள்ளது. தற்போது இதை மத்திய அரசின் சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து தேர்தல் அறக்கட்டளைகள் நிதி பெறுவது தடை செய்யப்படவில்லை. அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுப்பதால், மறைமுகமாக வெளிநாட்டு நிதி அரசியல் கட்சிகளுக்கு போகிறது. வெளிநாடுகளில் இருந்து தேர்தல் அறக்கட்டளைகள் நிதி பெறுவதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

நாங்கள் இந்த பிரச்சினையை இப்போது கையில் எடுத்திருக்கிறோம். இந்த ஓட்டையை அடைப்பதற்கு சட்ட அமைச்சகமும், நிதி அமைச்சகமும் இணைந்து பணியாற்றி வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது.

ஆகவே, வெளிநாடுகளில் இருந்து தேர்தல் அறக்கட்டளைகள் நிதி பெறுவதை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் சிபாரிசு செய்துள்ளோம். இதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

இவ்வாறு நசீம் ஜைதி கூறினார்.

English Summary : 2 years in prison for disinformation candidates. Chief Election Commissioner recommended.