Rajnath_Singhமைக்ரோசாப்ட் மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளருமான, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமாகிய பில் கேட்ஸ் அவர்களின் மனைவி மெலிண்டா கேட்ஸ் நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை சார்பில் இந்தியா உள்பட உலகநாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த சில ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்த அறக்கட்டளை மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள மெலிண்டா கேட்ஸ், புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நடைபெற்றுவரும் பணிகளை அமைச்சருக்கு விளக்கிக் கூறிய மெலிண்டா கேட்ஸ், நாட்டில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு வளர்ச்சியடையும் நோக்கத்தில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

இருபது நிமிடங்கள்வரை நீடித்த இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் அனைத்து தொண்டுகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என மெலிண்டா கேட்ஸிடம் ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக மத்திய அரசு வடாரங்கள் தெரிவித்துள்ளன.

English Summary : Home Minister Rajnath Singh meeting with the wife of Bill Gates.