Rajesh-Lakhoni-23316
தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பனி துணை ராணுவப் படைகளை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாகவும், விரைவில் துணை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்திற்கு மே 16ஆம் தேதி பொதுத்தேர்தல் வாக்குப்பதிவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையிலான தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தல் துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியபோது, “தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன. இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. இதற்கான முகாம் வரும் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பெண் அரசு ஊழியர்களை இரவு நேர தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கு விலக்களிக்கப்படும். அடுத்தவாரத்தில், துணை தேர்தல் ஆணையர்கள் குழு, தமிழகத்துக்கு வருகிறது. இதற்கான தேதி ஹோலி பண்டிகைக்குப் பின் அறிவிக்கப்படும்.

தமிழக அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டைகளை தொடர்ந்து வழங்க, தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அதே போல் மருத்துவ சேவைகள் கழகம் மூலம், அத்தியாவசிய தேவைகளுக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் வாங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளனர். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததும், உடனடியாக மாவட்டம், கட்சி மற்றும் வேட்பாளர் தகவல்கள் சுருக்கமாக இணையதளத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், ஆவணங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
English Summary: Army force for tamil nadu election Chief Election official announcement.