womens-23316
தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நூறு சதவித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் பாணியில் தமிழக வாக்காளர்களைக் கவர விதவிதமான போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், மனித சங்கிலி, விழிப்புணர்வு ஊர்வலம், கல்லூரிகளில் தூதுவர்கள் நியமனம் என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

முக்கியமாக முதன்முதல் ஓட்டு போடும் இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர்களை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் வாக்காளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் புதிது புதிதாக விளம்பரங்களை செய்து வரும் தேர்தல் ஆணையம் பெண் வாக்காளர்களை கவரவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஆண் வாக்காளர்கள் அளவுக்கு அல்லாமல், வாக்குப் பதிவில் சிறிய அளவேனும் பின் தங்கியே பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் பெண் வாக்காளர்களை, வாக்குச்சாவடிக்கு அழைத்து வரும் வகையில் புதிய வகையான நூதன பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது.

முதல்கட்டமாக பெண்களை அதிகம் கவரும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களையே அதற்கு ஒப்பீட்டாய் சுட்டிக்காட்டி பெண்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. ஒருசில முக்கிய நகரங்களின் பேருந்து நிறுத்தத்தில், `லட்சுமியம்மா எப்போதும் மெகா சீரியல் பார்க்க 100 சதவீதம் ரெடி. ஆனா வாக்களிக்க?’ என்று வைத்துள்ள பதாகை பெண்களை அதிகம் யோசிக்கவும் வைத்து, வாக்களிப்பதன் அவசியத்தையும் அவர்களுக்கு ரத்தின சுருக்கமாய் புரிய வைத்துள்ளது. இந்த வாசகம் பெண்கள் மத்தியில் மிக அதிக அளவில் பிரபலமடைந்து வருவதால் கோயில்கள், நியாய விலைக்கடைகள் ஆகிய பகுதிகளிலும் இதே போல் பதாகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
English summary – New effort to attract women voters – Election commission