தெற்கு ரயில்வே ரயில்வே பயணிகளின் வசதிகளை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள கவிதா சிறப்பு ரெயில் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் இந்த ரெயிலில் கட்டணம் அதிகம் என்ற கருத்து பொதுவாக இருந்து வரும் நிலையில் கவிதா சிறப்பு ரெயிலின் கட்டணத்தில் தர்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதலில் முன்பதிவு செய்தால் கட்டணம் குறைவாகவும், கடைசி நேரத்தில் முன் பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் அதிகமாகவும் இருக்கின்றது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:-
சுவிதா சிறப்பு ரெயிலில் 2-ம் வகுப்பு ஏ.சி., 3-ம் வகுப்பு ஏ.சி., மற்றும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது 2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியில் பயணம் செய்ய முதலில் முன் பதிவு செய்யும் 20 சதவீத பேருக்கு கட்டணமாக ரூ.1,560-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பேருக்கு ரூ.2,285-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பேருக்கு ரூ.3,015-ம், அதற்கு அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பேருக்கு ரூ.3,745-ம், அதற்கு அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பேருக்கு ரூ.4,470-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 3-ம் வகுப்பு ஏ.சி.யில் பயணம் செய்ய முதலில் பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு ரூ.1,120-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு ரூ.1,640-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு ரூ.2,155-ம், அதற்கு அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு 2,670-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு ரூ.3,185-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய முதலில் முன்பதிவு செய்யும் 20 சதவீதம் பேருக்கு ரூ.415-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு ரூ.595-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு ரூ.775-ம், அடுத்த 20 சதவீத பயணிகளுக்கு ரூ.955-ம், அடுத்து பதிவு செய்யும் 20 சதவீத பேருக்கு ரூ.1,135-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 800 இடங்கள் இருந்தால் முதலில் முன்பதிவு செய்யும் 20 சதவீத பயணிகளுக்கு (160 பேருக்கு), கட்டணமாக 415-ம், அடுத்த 20 சதவீத பயணிகளுக்கு (160 பேருக்கு), கட்டணமாக ரூ.595 நிர்ணயிக்கப்படும். இதேபோல் ஒவ்வொரு 20 சதவீத பயணிகளுக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டவர்கள் முதலிலேயே முன்பதிவு செய்துகொண்டால் குறைந்த கட்டணத்தில் கவிதா சிறப்பு ரெயிலில் பயணம் செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary: Suvitha special train: special offer for first booking.