வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்து பொருட்களையுமே ஆன்லைனில் வாங்கும் வழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் இ காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அந்நிய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், இ-காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு அடிப்படையிலான (inventory-based model) மாதிரி அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 சதவீத அன்னிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் துணை இல்லாமல் நேரடியாக இ காமர்ஸ் துறையில் நுழைய முடியும்.
இ காமர்ஸ் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவு அன்னிய முதலீட்டை ஈர்க்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இந்திய நிறுவனங்களும், அமேசான், இ-பே போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய இ காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியை தொடர்ந்து உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நிறுவனங்களின் போட்டி காரணமாக நுகர்வோர்களுக்கும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
English Summary: 100 per cent foreign direct investment in the field of e-commerce. Allow Central Government.