rajeshlakhoniதமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகள், விழிப்புணர்வு மற்றும் வழக்குகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “தேர்தல் தொடர்பான கேள்விகள் கேட்டு அதற்கு முதலில் பதிலளிக்கும் 5 பேருக்கு, டி-ஷர்ட் உள்பட கவர்ச்சிகரமான பரிசுகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10 மணிக்கு இந்தக் கேள்விகள் இணையதளம், பேஸ்புக், ட்விட்டரில் வெளியாகும். தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் கொண்ட டி-ஷர்ட், பேட்ஜ் வழங்கப்பட உள்ளது. மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு வழங்கும் பைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை அச்சடித்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

பொது இடங்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு விளம்பர தட்டிகள் வைக்க, தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. அதே நேரத்தில் தேர்தல் தொடர்பாக, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்தால் நோட்டீஸ் அளிக்கப்படும். தேர்தல் தனிச்சின்னம் தொடர்பாக, ஏப்ரல் 17 வரை அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்கலாம். தேர்தல் பார்வையாளர்கள் ஏப்ரல் 26-ம் தேதிக்கு பிறகு தமிழகம் வந்து பணியில் இணைந்து கொள்வர்.

தருமபுரியில் தேர்தல் பறக்கும் படையினருடன் பணியில் இருந்த வீடியோகிராபர் ஒருவர், அங்கு பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகள், விவரங்களை பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக புகார் வந்தது. இதையடுத்து, அவர் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தேர்தல் பணியில் உள்ள வீடியோகிராபர்கள் ஆண்ட்ராய்டு செயலியுடன் கூடிய கைபேசிகள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

English Summary: Special Gift announced for awareness of Voting. Rajesh Lakkani Information.