emergencynumber30316அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடு முழுவதும் ஒரே அவசர எண் பயன்படுத்தப்பட்டு வருவது போன்று இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை, மீட்புப்பணித்துறை என பல்வேறு உதவிகளுக்கு பல்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.

இதைப் போல இந்தியாவிலும் அனைத்து அவசர கால உதவி அழைப்புகளுக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருப்பது போன்று ஒரே எண்ணை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை தற்போது மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி தற்போது 112-ஐ இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் புதிய அவசர ஹாட்லைன் எண்ணான 112-ல் காவல்துறை(100), தீயணைப் புத்துறை(102), ஆம்புலன்ஸ்(103) மற்றும் அவசர பேரிடர் மேலாண்மை(108) ஆகியவற்றின் எண்களும் சேர்க்கப்படும். போகப் போக அனைத்து அவசர உதவி எண்களும் 112 உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் இந்த சேவை இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: One Emergency Number of India like US, England.