ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தாலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதன் மூலம் 9 கோடி பேர் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் 36 மாதங்கள் பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அது செயல்படாத கணக்காகக் கருதி, அந்த கணக்குகளில் உள்ள வைப்பு நிதித் தொகைக்கு வட்டி வழங்கும் நடைமுறை கடந்த 2011-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. செயல்படாத பி.எஃப். கணக்குகளில் சுமார் ரூ.36,000 கோடி வைப்பு நிதி இருப்பதாக சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்தத் தொகைக்கு மீண்டும் வட்டி வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்தரேயா இதுகுறித்து கூறியதாவது: தொழிலாளர் நலனில் எங்களுக்கு எப்போதும் அக்கறை உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. ஆனால், அந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் செயல்படாமல் இருக்கும் பி.எஃப். கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது அந்த தொகைக்கு மீண்டும் வட்டி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று கூறினார். இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary: Interest for more than 3 years idle Account. Central Government Decision.