Tamilnadu-police30316வளர்ந்து வரும் கணினி உலகில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் மயமாகி வேலைகள் எளிதாக்கபப்ட்ட நிலையில் காவல் நிலையங்களில் மட்டும் இதுவரை கையால் எப்.ஐ.ஆர் எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கணினி மூலம் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக காவல்துறை பணிகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக முதல் தகவல் அறிக்கையை கணினி மூலம் பதிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் தகவல் அறிக்கையை கையால் எழுதுவதால் காவல்துறை தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. கையால் எழுதும்போது எழுத்துப்பிழை, பொருள் பிழை ஏற்படுகிறது. மேலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் முதல் தகவல் அறிக்கை சேதமடைந்துவிடுகிறது. வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை எடுத்துப் பார்ப்பதிலும் சில இடர்பாடுகள் உள்ளன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக பல்வேறு முறைகேடுகளுக்கு இது வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கையை கணினி மூலம் பதிவு செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் தகவல் அறிக்கை பதிவதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள ஆய்வாளர்களுக்கும், பிற நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக குற்ற ஆவண காப்பகம் மூலம் தனியாக சர்வர் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சர்வர்கள் மூலம் அனைத்து காவல்நிலையங்களிலும் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

இத் திட்டத்தின் மூலம், காவல்துறை அதிகாரி ஒருவர் எங்கிருந்தாலும் விசாரணைக்காகவோ, ஆய்வுக்காகவோ முதல் தகவல் அறிக்கையை பார்க்க முடியும். அதேநேரத்தில் இணையதள வழியை காவல்நிலைய அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும், நீதிமன்றமும் மட்டுமே கையாள முடியும். அதற்குரிய கடவுச்சொல் அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறையின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

இதுகுறித்து தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டம் ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு, நீக்கப்பட்டது. இந்த புதிய திட்டம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதால் முதல் தகவல் அறிக்கை கணினியில் பதிவு செய்யப்படுவதுடன் உடனுக்குடன் நகல் வழங்கப்படும். காவல் நிலையங்களில் கணினி பழுது, இணையதளம் துண்டிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் தற்காலிகமாக குற்றவழக்கு எண்ணுடன் முதல் தகவல் அறிக்கை அதற்கென உள்ள காகிதத்தில் கையால் எழுதப்பட்டு பின்னர் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் அடுத்தக் கட்டமாக குற்றப் பத்திரிகை, சாட்சிகள் வாக்குமூலம், நாள் குறிப்பு, சாட்சிப் பட்டியல், இறுதி அறிக்கை, குற்ற மாதிரி வரைபடம் ஆகியவற்றை கணினி மூலம் பதிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்று கூறினார்.

English Summary: FIR by Computer in Tamilnadu Police Station April 15th onwards.