நமது முன்னோர்களாக இருந்து ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் தேர்தல் குறித்து அப்போதே பல திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட சில தகுதிகளையும், யார் யாரெல்லாம் போட்டியிட தகுதியற்றவர்கள் என்பதையும் அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். அதன்படி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்,.
1) கால்வேலி நிலம் இருக்க வேண்டும்.
2) சொந்த வீட்டுமனை இருக்க வேண்டும்.
3) 35 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஊராட்சி என்பது பொதுமக்களின் வாழ்வை பாதிக்கக்கூடியது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்பட்டவர்களே தேவை. 35 வயதுக்கும் குறைந்தவர்களின் கையில் பொதுமக்களின் வாழ்வை பாதிக்கும் ஆட்சியை ஒப்படைக்க முடியாது என்பது அந்தக்காலத்து அனுபவம். 70 வயதுக்கு மேல் ஆட்சியை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுக்கொடுத்து தாங்கள் ஒதுங்கி விட வேண்டும்.
4) ஒரு குறிப்பிட்ட கல்வி வரம்பு வரை (சாஸ்திரம், வேதங்கள்) தேர்ச்சி பெற்றவர்களே தேர்தலில் நிற்க முடியும்.
5) ஒரு வேதமும் கற்காதவர்கள் எனில் 1 வேலி நிலமும், சொந்த வீடும் வைத்திருக்க வேண்டும்.
6) உடல் வலிமை மற்றும் மன வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
7) கட்டாயம் வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்.
தற்போதைய தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவை இல்லை. ஆனால் மன்னர்கள் காலத்தில் போட்டியிடுபவர்கள் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அதாவது வேதம், சாஸ்திரம் போன்ற கல்வியை அவர்கள் கற்றிருக்க வேண்டும். அதே போல் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிய தலைவர் ஆக முடியாது. ஒரு முறை போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் நிற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்களும் இருந்துள்ளனர்.
1) வாரியங்களுக்கு கணக்கு காட்டாது இருந்தவர்கள்.
2) கையூட்டு செய்தவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாதவர்கள் ஆவர்.
3) பிறரின் பொருட்களை பறித்தவர்கள்.
4) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி காலத்தில் இடையில் தவறு செய்தால் உடனே பதவியில் இருந்து விலக்கப்படுவார்கள். மேலும் பிறர் பொருளை அபகரித்தவர்கள், பிறர் மனையை அபகரித்தவர்கள், பஞ்ச மகா பாதகங்கள் புரிந்தவர்களுக்கு, எந்த விதத்திலும் துணை போனவர்களும் தேர்தலில் கட்டாயம் நிற்க முடியாது.
அந்தக் காலத்தில் லஞ்சம் பெற்றவர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் தேர்தலில் எந்தக் காலத்திலும் போட்டியிட முடியாது. அத்தகைய நெருங்கிய உறவினர்கள் யார் யார் என்ற பட்டியலையும் கல்வெட்டில் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது, குற்றச் செயலில் ஈடுபட்டவரின் தந்தை, பிள்ளை, சகோதரர், மாமனார், மைத்துனர், சகோதரியின் கணவர், சகோதர சகோதரிகளின் பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள், அத்தை பிள்ளை, மாமா, மாமா பிள்ளை, தாயாரின் சகோதரி பிள்ளை ஆகிய அனைவரும் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Who is Eligible to participating Election at the time of kings?