votingmachine4416தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலை நேர்மையாகவும், அதே சமயத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெறவும் தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மணற்சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சிற்பத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் பார்வையிட்டார்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவை 100 சதவீதமாக உயர்த்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி, அரசினர் கவின் கலைக்கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து மெரினா கடற்கரையில் செய்யப்பட்ட மணற்சிற்பத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான பி.சந்திரமோகன் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசினர், கவின் கலைக்கல்லூரியை சார்ந்த மாணவர், ஆசிரியர்களும், தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்களும் சுமார் 50 மேற்பட்ட மணற்சிற்ப கலைஞர்கள் கலந்து கொண்டு 100 சதவீத வாக்களிப்பதில் அவசியத்தினை குறித்து 2 பெரிய மணற்சிற்பங்களை வடிவமைத்திருந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் அவர்கள் கூறியதாவது: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தங்கள் வாக்குகளை 100 சதவீதம் அளிக்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவிற்கான வயது பூர்த்தியடைந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் வாக்குகளை வாக்கு பட்டியலில் 100 சதவீதம் சேர்க்க வேண்டும்.

வாக்குப்பதிவு குறைவாக பதிவான பகுதிகளை கண்டறிந்து அங்கும் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். முதியோர் இல்லங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கோவில்கள், தெருக்கள், வார சந்தைகளில் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாவட்ட கலெக்டருமான கு.கோவிந்தராஜ், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், துணை கமிஷனருமான ஆஷியா மரியம், தேர்தல் நடத்தும் அலுவலர் மு.வீரப்பன், மண்டல அலுவலர் விஜயகுமார் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English Summary: 100% voter awareness in Chennai Marina Sand Sculpture.