MUFTI4416ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி இன்று பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் சிங் அவர்களும் இன்று பதவியேற்க உள்ளதாக காஷ்மீர் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஜம்முவில் கவர்னர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள எளிய நிகழ்ச்சி ஒன்றில் மெஹபூபா, நிர்மல் சிங் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் நேற்று மெஹபூபா, தனது கட்சியின் மூத்த தலைவர்கள், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிர்மல் சிங் ஆகியோர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் யார் யாருக்கு எந்தெந்த அமைச்சர் பதவி ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காஷ்மீரில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது பிடிபி கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்வது குறித்தும் கட்சியினருடன் மெகபூபா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் எம்.வெங்கய்ய நாயுடு மற்றும் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஒமர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மெகபூபா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விழாவில் கலந்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்தி முகமது சையது தலைமையில் பாஜக, பிடிபி கூட்டணி பொறுப்பேற்றது. இதில் பிடிபியின் முப்தி முகமது சையது முதல்வராகவும், பாஜகவின் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்நிலையில் திடீரென முப்தி முகமது சையது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்ததை அடுத்து புதிய அரசு பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் முப்தியின் மகள் மெகபூபா சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி மீண்டும் பிடிபி, பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதையடுத்து கடந்த 26ஆம் தேதி மெகபூபா முப்தி, கவர்னர் என்.என்.வோராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே.

English Summary: Mehbooba is First woman sworn in as chief minister of Kashmir.