aadhaar_cardஇந்தியாவில் உள்ள குடிமகன்கள் அனைவருக்கும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை விளங்கி வரும் நிலையில், அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கிடும் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை இன்னும் ஒருசில நாட்களில் 100 கோடியை அடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஆதார் திட்டத்தை செயல்படுத்தி வரும் இந்திய தனித்துவ அடையாள எண் ஆணைய (யூஐடிஏஐ) இணையதளத்தில் இதுவரை 99.91 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டுவதை அறிவிப்பதற்காக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வகையில் ஆதார் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பயன்கள் மற்றும் மானியங்களை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளது. ஆதார் அடையாள எண் வழங்கும் நடைமுறைகளை விரைவில் பூர்த்தி செய்ய மத்திய அரசு விரும்புகிறது.

கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சமையல் எரிவாயு மானியம் போன்றவை ஆதார் எண் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English Summary: 100 Crore Aadhaar Card nearing.