சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களுக்கு என தனி பெட்டி இல்லாததால், தனியாக பயணம் செய்யும் பணிகள் அசெளகரியமான சூழலை சந்திப்பதாக பல புகார்கள் வெளிவந்ததை அடுத்து அந்த ரெயிலில் பெண்களுக்கான பிரத்யேக 2-ம் வகுப்பு பொது பெட்டி ஒன்று தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை சென்ட்ரல்-மங்களூர் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் வண்டி எண்: 12685, 12686 என்ற ரெயிலில் ஏற்கனவே இருந்த பெட்டிகளுக்கு பதிலாக ‘எல்.எச்.பி.’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்டிகள் சமீபத்தில் இணைக்கப்பட்டன. இந்த பெட்டியில் இருக்கைகள் வித்தியாசமான முறையில் அமைந்திருந்ததால், ஏற்கனவே இருந்த 40 இருக்கைகளை உள்ளடக்கிய பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லாததால் அசவுகரியமான சூழலை சந்திப்பதாக சென்னை, காட்பாடி பகுதிகளை சேர்ந்த பெண் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தெற்கு ரெயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்சக்சேனா முன்பே இருந்தது போன்று பெண்களுக்கென பிரத்யேக 2-ம் வகுப்பு பொது பெட்டி ஒதுக்குமாறு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் 100 இருக்கைகளை கொண்ட பெண்கள் பெட்டி ஒன்று உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Women Coach is added again in Chennai Express Train.