Book Fairசென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த வருடமும் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (“பபாசி’) சார்பில் 39-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியில் புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரிக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கண்காட்சியின் தொடக்க நாளன்று, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில், சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று ஒரு அரங்கம் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், விவாதம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

புத்தக கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள், இளைஞர், பெண்கள், எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆசிரியர் என ஒவ்வொரு சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும். அந்தந்த நாள்களில் குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறும். மேலும் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு பபாசி விருது வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படும் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. வார நாள்களில் பிற்பகல் 1 முதல் இரவு 9 வரையிலும், வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 9 வரையும் கண்காட்சி நடைபெறும். இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

வீட்டில் நூலகம் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில், கண்காட்சியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தகங்களை அடுக்கி வைக்க உதவும் ஷெல்ஃப் போன்ற பொருள் இலவசமாக வழங்கப்படும். மேலும் மாடித் தோட்டம் குறித்த அரங்கு, உணவுத் திருவிழா, ஓவியம், இசை, சார்ந்த போட்டிகள் ஆகியவையும் இடம்பெறும் என்றனர்.

English summary : Chennai Book Fair decided to recognize the Tamil diaspora.