தமிழகத்தில் ரேசன் கார்டுகளின் ஆயுள் முடிந்துவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உள்தாள் ஒட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் தயாராகி வருவதாகவும், இதன் காரணமாகவே உள்தாள் ஒட்டுவதாகவும் அரசு கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகளாக காரணம் கூறி வருகிறது. இந்நிலையில் சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ என்னும் புதிய முயற்சியை வெற்றிகரமாக உருவாக்கியுளனர்.
இதுகுறித்து கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.எம். ஆனந்த்குமார் கூறியதாவது: ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் உள்ள குளறுபடிகள், பிரச்னைகளை நீக்கும் விதமாக இந்த புதிய “ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ திட்டத்தை எங்கள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். வங்கி கிரெடிட் கார்டைப் போலவே இந்தக் கார்டில் பயனாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இதைக் கொண்டு சென்று ரேஷன் கடைகளில் கொடுக்கும்போது அந்தந்த பொருட்கள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அவர் பெயரில் வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. இந்தப் புதிய திட்டம் நுகர்வோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தத் தவறும் நிகழாது. வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. நுகர்வோருக்கும் நேரம் காலம் மீதமாகும் போன்ற நல்ல விஷயங்கள் இதில் உள்ளன.
சமூகத்துக்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை எங்களது பிரிவு மாணவர்கள் கார்த்திகேயன், கிரண் ராஜ், ஆனந்தன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், முதல்வர் டாக்டர் கே.எஸ். சீனிவாசன் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தமிழக அரசு இந்தத் திட்டத்தை எடுத்துச் செயல்படுத்தும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமுதாயத்துக்குத் தேவையான மிகவும் அவசியமான திட்டமாகும் இது. என்று கூறினார். மாணவர்களின் இந்த முயற்சியை தமிழக அரசு செயல்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
English Summary: College students created a smart ration card. Government Use?