மத்திய அரசு சமீபத்தில் புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியின்று மத்திய அரசு தற்போது பின்வாங்கிவிட்டது. இந்த திட்டம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தற்போஅறிவித்துள்ளது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. புதிய திட்டத்தின்படி, தொழிலாளர் வைப்பு நிதி தொகையில் இருந்து 100% சதவீதம் தொகையை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 58 வயது நிரம்பிய தொழிலாளர்கள் மட்டுமே பி.எப்- பணத்தில் இருந்து முதலாளியின் பங்கு தொகையை எடுக்க முடியும். ஆனால் எதிர்பாராத காரணமாக 58 வயதுக்குள் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று விட்டால், அவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வைப்பு நிதியை மட்டுமே பெற முடியும்.
அதன்படி, புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 30ஆம் தேதி நெருங்கி வரும் நிலையில் புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை கைவிடக் கோரி நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பெங்களூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், தொடர் போராட்டத்தை அடுத்து புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை 3 மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி ஜூலை 31-ம் தேதி வரை இந்த புதிய திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் துறை இணை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் திட்டத்தை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
English Summary : New Employees provident fund scheme withdrawn for 3 months due to protests.