இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோர், கூகுள் குரோம், மொசில்லா ஃபயர்பாக்ஸ் ஆகிய இண்டர்நெட் புரவுசர்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இண்டர்நெட் தொழில்நுட்பங்கள் குறித்த புள்ளிவிபரங்களை தயாரித்து வெளியிட்டு வருவதில் முன்னிலை இடம் பெற்றுள்ள இணையதளமான NetMarketShare.com என்ற இணையதளம் இண்டர்நெட் பிரவுசர்களின் தரவரிசைப் பட்டியல் குறித்த ஆய்வுகளை கடந்த சில நாட்களாக நடத்தி வந்து தற்போது அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுகளின்படி நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் கூகுளின் குரோம் பிரவுசர் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகின் 41.7 சதவீத கம்ப்யூட்டர்களில் கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 41.4 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், மொசில்லா பயர்பாக்ஸ் 9.7 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
கூகுள் குரோம் பிரவுசருக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிவேகமாக செயல்படும் ’எட்ஜ்’ பிரவுசரை விண்டோஸ் 10 இயங்குதளத்தில் களமிறக்கியிருந்தது. எனினும், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் கூகுள் குரோமையே அதிகம் விரும்புவதாக இந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Ranking list of Internet Browsers. Google Chrome first place.