இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய அளவில் மிக அதிகமாக சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்கு வரத்துகழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் மாதந்தோறும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கிளை மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சாலை விபத்துகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும் தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 16 பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைகின்றனர். சுமார் 50 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக் குறைவே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் மொத்தம் 69 ஆயிரத்து 59 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15 ஆயிரத்து 642 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டை விட, இறப்பு எண்ணிக்கை 452 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மக்கள் அதிகளவில் பயணம் செய்யும் அரசு பஸ்களில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, அரசு பஸ்களின் சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை புதிய உத்தரவுகளை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் மூத்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு பஸ்களின் சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய எட்டு போக்கு வரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்குள் மாதந்தோறும் ஒருமுறை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு விபத்து தடுப்பது தொடர்பாக நேரடியாக பயிற்சி அளிக்க வேண்டும்.
இதேபோல், போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் கிளை மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், சமீபத்தில் நடக்கும் சாலை விபத்துகளை உதாரணம் காட்டி, விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து எவ்வாறு செயல்பட்டு இருந்தால் அந்த விபத்தை தடுத்திருக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசு பஸ்களின் சாலை விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.
English Summary : Monthly training classes to reduce accidents. Order to Tamil Nadu State Transport Corporation.