election_rules100216வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் 100% வாக்குப்பதிவுடன் நடைபெற வேண்டும் என்பதோடு முடிந்தளவு நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் உள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவரது பேட்டியில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில், 3.29 லட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கான தபால் வாக்குகள் விநியோகிக்கும் பணி கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளன. சென்னையில் இதுவரை 60 சதவீத அளவுக்கு தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் மட்டும் 19 ஆயிரத்து 951 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு வரும் 12, 14 ஆகிய தேதிகளில் மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளின்போதும் அவர்கள் தங்களிடம் உள்ள தபால் வாக்குகளை அங்குள்ள பெட்டியில் போடலாம்;

தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அவரவர் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம். அவர்களை யாரும் இப்போதே வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தவோ, வற்புறுத்தவோ முடியாது

தமிழகம் முழுவதும் தினமும் ‘பூத் சிலிப்’புகள் 10 முதல் 15 சதவீதம் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. ‘பூத் சிலிப்’புகள் நாளை வரை வினியோகிக்கப்படும்.

பண நடமாட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 234 தொகுதிகளிலும் பறக்கும் படையினர் எண்ணிக்கை 3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவை கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு மத்திய செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வாக்குப்பதிவுக்கு முன்பாக வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் மண்டல குழுக்கள் செயல்படும். அந்த குழுவில் 4 அரசு பணியாளர்கள், ஒரு போலீஸ்காரர், ஒரு நுண் பார்வையாளர் என மொத்தம் 6 பேர் இடம் பெற்று இருப்பார்கள். 8 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல குழு வீதம் நியமிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் கையும், களவுமாக பிடிபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் 94 தொகுதிகளில் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3-லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், அந்த தொகுதிகளில் கூடுதலாக 20 முதல் 25 மண்டல குழுக்களும் செயல்படும்.

ஒரு இடத்தில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்துக்கு பறக்கும் படையினர் விரைந்து செல்வார்கள். இதற்கிடையில் அதுபற்றிய தகவல் வருமான வரித்துறை குழுவுக்கும், அந்த தொகுதி தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் அங்கு விரைந்து செல்வார்கள். பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் இடத்தில் சட்டப்படி வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்த முடியும். அதனால் தான் எந்த மாநில சட்டசபை தேர்தலிலும் இல்லாத நடைமுறையாக இந்த தேர்தலில் வருமான வரித்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து செல்போன் நிறுவன ஏஜெண்டுகள் ரீ-சார்ஜ் செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

English Summary : If you give money to voters immediately arrested. Rajesh lakkani Warning