college_applicationபொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் அதாவது மே 9 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவருவதால் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார். மேலும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 398 இடங்கள் (15 சத வீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 2,257 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு இருக்கின்றன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன.

இவை தவிர சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்.பி.பி.எஸ் இடங்களில், 65 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. அதேபோல் 8 தனியார் (சுயநிதி) மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,010 எம்.பி.பி.எஸ் இடங்களில், 595 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில், 970 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று அதாவது மே மாதம் 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதையடுத்து முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த 1-ம் தேதி நடத்தப்பட்டது. 2ஆம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இல்லாமல், கலந்தாய்வு முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் முடிவுகள் இன்று (09.05.2016) அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய தினம்தான் வழக்கின் தீர்ப்பும் வெளியாக உள்ளது. மேலும் பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் 17-ம் தேதிதான் வெளியாகிறது. அதனால் இன்று தொடங்க இருந்த விண்ணப்ப விநியோகம் தள்ளிப்போகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா அவர்கள் கூறியபோது, “பிளஸ்-2 தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வெளியாகிவிடும் என்று நினைத்து, மே 9-ம் தேதி எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று அறிவித்தோம். தற்போது வரும் 17-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்ப விநியோகமும் தள்ளிப்போகிறது. எப்போது விண்ணப்ப விநியோகம் என்பது முறைப்படி தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.

English Summary : The date was not given a respite today MBBS applications.