தமிழ்நாட்டில் கடந்த 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பணம் பறிமுதல் மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் அதிக வந்த காரணத்தால் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், மற்ற 232 தொகுதிகளுக்கு மட்டும் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு வேட்பாளர்கள் உள்பட 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை 3 வாரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்திருப்பதாகவும், வேட்பாளர்களின் ஆலோசனையைக் கேட்டு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர்களின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் ஜுன் 3-ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணப்படும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜூன் 20-ம் தேதியுடன் அனைத்துவிதமான தேர்தல் நடவடிக்கைகளும் முடித்துக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி சென்னை ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary : Aravakurichi , Thanjavur blocks announcement of the new election date