எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மற்றும் திருச்சி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். இதற்கான கலந்தாய்வு ஜூலை 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.திலகர் தெரிவித்தார். முன்னதாக அவர் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புக்கு மொத்தமுள்ள 320 இடங்களில் 272 இடங்கள் தமிழகத்துக்கான ஒதுக்கீடு. இதேபோல பி.டெக் படிப்புகளுக்கு 60 இடங்கள் என மொத்தம் 332 மாணவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 13-ம் தேதி காலை தொடங்குகிறது.
தரவரிசையில் இந்த ஆண்டு நாமக்கல் மாணவர் எஸ்.தீனேஷ்வரும், திருச்சி மாணவர் ஆர். தட்சிணாமூர்த்தியும் 199.75 கட் ஆப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். நாமக்கல் எஸ்.நந்தினி(199.50), தர்மபுரி ஏ.ஆர்.தினேஷ்குமார்(199.50), நாமக்கல் என்.வி.பிரவீன்(199.25), நாமக்கல் என்.வர்ஷினி(199.25), கரூர் யு.பிரசன்னகுமார்(199.25), சேலம் சி.சாருமதி(199.25), நாமக்கல் பி.கே.ஸ்கந்தபிரசாத்(199.25), நாமக்கல் எஸ்.மோனிஷா(199.25) ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களில் 6 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் பிளஸ் 2 தொழில் பிரிவு மாண வர்களுக்கான கலந்தாய்வு வரும் 13-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கலையியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 14-ம் தேதி காலையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்று முதல் 10 மாணவர்களுக்கான கலந்தாய்வு சேர்க்கை சான்றிதழை வழங்கவுள்ளார். பிடெக் உணவுத்தொழில்நுட்பம், பால் வளத்தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட்ஆப் மதிப்பெண் குறைந்துள்ளதால் ஒரு இடத்துக்கு 5 மாணவர்கள் வீதம் கலந்தாய்வுக்கு மொத்தம் 1660 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பி வைக்கப்படும். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத குறிப்பிட்ட கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம். கட்-ஆப் விபரங்களுக்கு www.tanuvas.ac.in. என்ற இணையதளத்தைக் காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary : From July 13, the counseling Of Veterinary Medical studies.