SSC-CGL-Result1எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்று வரும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இனிமேல் இணையதளம் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகளைத் தவிர்க்க முடியும் என்றும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வை நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

சி.ஜி.எல்.இ என்னும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வின் மூலம் புலனாய்வு அமைப்புகளுக்கான உதவியாளர், வருமான வரித் துறை ஆய்வாளர் போன்ற மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வு முறையை மாற்றி அமைத்திருப்பதுடன், முதல் முறையாக கட்டுரைப் பகுதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்வாணையத் தலைவர் ஆசிம் குரானா செய்தியாளர்களிடம் கூறியபோது, “சி.ஜி.எல்.இ தேர்வை அடையாளக் குறியீடு (ஓ.எம்.ஆர்.) முறையில் நடத்துவதற்குப் பதிலாக இணையதளம் மூலம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கையின் மூலம் தேர்வு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்’ என்று கூறினார்.

புதிய தேர்வு முறை குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இணையதளத்தில் தேர்வு நடைபெறவுள்ளதால் வினாத்தாள் கசியும் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் குரானா தெரிவித்தார்.

இந்த ஆண்டில் சி.ஜி.எல்.இ தேர்வுக்கு 38 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் இந்தப் புதிய முறையில் தேர்வை எதிர்கொள்ளவுள்ளதாகவும் இன்னும் 2 மாதங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வு இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்றும், புதிதாக யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சிஜிஎல்இ தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதலாம் கட்டமாக பழைய நடைமுறையில் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டு 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. தற்போது இது 100 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் கால அவகாசமும் ஒன்றேகால் மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்வு ஏற்கெனவே இருந்தபடி 200 மதிப்பெண்களுக்கும், மூன்றாம் கட்டத் தேர்வும் அதேபோல் 100 மதிப்பெண் களுக்கும் நடத்தப்படவுள்ளது

English Summary: C.G.L.E Result through the internet. SSC