B.Ed_Colleges_In_Tamilnaduஎம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பி.எட். படிப்புக்கும் நாடு முழுவதும் நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஆசிரியர் பயிற்சிக் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) சார்பில், டெல்லியில் ‘பிராக் ஷிக் ஷக்’ என்னும் ஆசியர்களுக்கான கல்வி இணையதள தொடக்கவிழா நடந்தது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுபாஷ் சந்திரா குந்தியா பேசியதாவது:

12ஆம் வகுப்பு முடித்த பின் ஒருங்கிணைந்த பிஎட் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பலனளிக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி கருத்து கேட்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் போதுமான அளவில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பின் புள்ளி விவரப்படி, நாட்டில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 13 லட்சம் தொடக்கப்பள்ளிகளில் 6.6 லட்சம் ஆசிரியர்கள் முறையான பயிற்சி இன்றி பணியாற்றி வருகின்றனர். சுமார் பத்து சதவீதப் பள்ளிகள் ஒரே ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. ஆசிரியர்களை ஆண்டு தோறும் நியமனம் செய்ய வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் நம் நாட்டின் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேசிய நுழைவுத்தேர்வு நடத்த ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English Summary: B.Ed. Entrance Examination across the country to study.