தமிழகத்தை போலவே கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆந்திராவின் சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 40 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஆந்திராவில் பெய்து வரும் மழை வெள்ளத்தில் நெல்லூர் அருகே பாலம் உடைந்து விட்டதால் கோயம்பேட்டில் இருந்து நெல்லூர் செல்லும் 20 ஆந்திர மாநில பஸ்கள் செல்லாமல் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் விஜயவாடா, ஐதராபாத், விசாகப்பட்டினம் செல்லும் 12 பஸ்களும் இன்று செல்லவில்லை. மேலும் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா சுட்டுக்கொல்லப்பட்டதால் அங்கு ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக சித்தூர் செல்லும் 8 பஸ்களும் புறப்படாமல் கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் சித்தூரில் இருந்து வரும் பஸ்களும் வரவில்லை. தமிழக அரசு பஸ்களும், நெல்லூர், சித்தூர் செல்லவில்லை.
இருப்பினும் திருப்பதி செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செல்கிறது. இந்த பேருந்துகள் திருத்தணி அருகே வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாற்றுப்பாதையான திருவாலங்காடு ஊத்துக்கோட்டை வழியாக செல்கின்றன.English summary-Andra buses stopped due to rain