சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளின் அவசர மருத்துவ உதவிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உள்ளே அவசர மருத்துவ உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ உதவி மையம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3 படுக்கைகள் மற்றும் முதலுதவி அளித்து நோயாளிகளை நிலைப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள், சிகிச்சை முறைகள் ஆகியவை உள்ளன. இந்த மையத்தில் ஒரு மருத்துவரும் இரண்டு நர்ஸ்களும் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி ஆன்மேரி மான்க்யூர் அவர்கள் கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு சுமார் 6 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் காயம், சுளுக்கு, மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு காரணங்களால் முதலுதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு இந்த மருத்துவ மையத்தில் இலவசமாக முதலுதவி செய்யப்படும். மேலும், ரயில் நிலையத்தின் வெளியே ஓர் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும். நோயாளிகளை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்கள் நிலைப்படுத்தப்பட்ட பின்பு உடனடியாக மாற்றப்படுவார்கள்.
மேலும் நடைபாதை, ரயில்களில் இருந்து நோயாளிகளை அவசர உதவி மையத்துக்கு அழைத்து வருவதற்கு பேட்டரியில் இயங்கும் வாகனம் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தென்னக ரயில்வேயின் கூடுதல் மண்டல மேலாளர் அனுபவ் ஷர்மா பேசுகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நாட்டில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேர அவசர மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டிருப்பது சிறப்பு வாய்ந்தது. பலதரப்பட்ட மக்கள் இதனால் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
English summary-Apollo opens emergency care centre along with Southern Railways at Chennai Central