vijay-61115இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் டைட்டில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ‘காக்கி’, ‘வெற்றி’ ஆகிய இரண்டு தலைப்புகள் தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இதில் ‘வெற்றி’ என்ற தலைப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

‘வெற்றி’ என்ற பெயரில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 1984ஆம் வருடம் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜயகாந்த், விஜி நடித்திருந்தனர். சரியாக 31 வருடங்கள் கழித்து மீண்டும் அதே பெயரில் அவருடைய மகன் நடிக்கும் படத்திற்கு அதே தலைப்பு வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் மார்க்கெட் போன்ற பிரமாண்ட செட்டில் விஜய், எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அந்த கெட்டப் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக அந்த கெட்டப்பில் விஜய் பெரிய தாடியுடன் தோன்றுவார் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை வியாபாரத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், தயாரிப்பாளர் தாணுவுடன் இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.
English summary-info about actor vijay’s 59th movie