name-board-61115தமிழகத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்து வருவது அவ்வப்போது நடைபெற்று வரும் சோதனை மூலம் தெரிய வந்து கொண்டிருக்கும் நிலையில் போலி டாக்டர்களை ஒழிக்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் உண்மையான டாக்டர்களுக்கு ‘ஸ்மார்ட் போர்டு’ வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தற்போது ஆரம்பித்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பில் டாக்டர்களுக்கு ‘ஸ்மார்ட் நேம் போர்டு’ (SMART NAME BOARD) வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் குமுதா லிங்கராஜு தலைமை தாங்கினார். பதிவாளர் டாக்டர் எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார். கவுன்சில் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் ஸ்மார்ட் நேம் போர்டை அறிமுதம் செய்து டாக்டர் குமுதா லிங்கராஜுக்கு வழங்கினார்.

இது குரித்து கவுன்சில் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் காண இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மூலம் டாக்டர்களுக்கு ஸ்மார்ட் நேம் போர்டு வழங்குகிறோம். 3 மாதங்களில் அனைத்து டாக்டர்களுக்கும் ஸ்மார்ட் நேம் போர்டு வழங்கப்படும். 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிதாக எம்பிபிஎஸ், முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு பதிவு செய்யும் டாக்டர்களுக்கு அப்போதே ஸ்மார்ட் நேம் போர்டு வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட் நேம் போர்டை அனைத்து டாக்டர்களும் தங்களுடைய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பொது மக்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இதில் டாக்டர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் க்யூஆர் கோடு (QR CODE) மற்றும் 56767 என்ற எஸ்எம்எஸ் எண்ணும் இந்த போர்டில் இருக்கும். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் க்யூ ஆர் கோடு ஆப் மூலமாக டாக்டரின் பெயர், படிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளலாம். இது தவிர போர்டில் இருக்கும் டாக்டரின் பதிவு எண்ணை 56767 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாலும் டாக்டர் குறித்த விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். போலி டாக்டர் என்றால் தகவல் இல்லை என்று வரும். இதன் மூலம் போலி டாக்டர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலில் வலியுறுத்தப்படும். சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி (ஆங்கில மருத்துவம்) சிகிச்சையை அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
English summary-digital name boards for doctors