பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்படிப்பிற்கு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டது. சென்னை தொழில்நுட்பக் கல்லூரி இயக்கக மையத்தில் நேற்று ஒரே நாளில் 505 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளது.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பு படித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைகழக வளாகத்துக்கு அருகில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி இயக்ககத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூன் 9ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என்றும் இந்த விண்ணப்பங்களின் விலை ரூ.300 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியின மாணவர்கள் உரிய சான்றிதழுடன் வந்தால் அவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஜுன் இரண்டாம் வாரத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்முன் மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் வழங்கப்படும்.
English Summary: Applications for Direct 2nd Year BE and B.Tech issued in Chennai Engineering College, Guindy.