பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் பயிலவுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, அரசு போக்குவரத்து துறை சார்பில் வருடந்தோறும் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 26 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களின் விவரங்களுடன் பள்ளி நிர்வாகிகள் விண்ணப்பித்தால் உடனுக்குடன் பாஸ் வழங்கிவிடுவோம்.
மேலும், மாநகர போக்குவரத்து கழகத்த்தின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.mtcbus.org/ என்ற இணையதளத்தில் இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.
இவ்வாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary: Applications Issued for Free Bus Pass to School Students.