திண்டுக்கல், கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கு வரும் 31-ஆம் தேதி கடை சி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையத்திலும் ஆண்டுதோறும் தலா 50 மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட உள்ளது.
பிளஸ் 2 தேர்வில் உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை கோட்பாடு மற்றும் செயல்முறை 1 மற்றும் 2, பயிர் உற்பத்தி கோட்பாடு மற்றும் செயல்முறை 1 மற்றும் 2 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதியன்று பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 25 வயதுக்கு மேற்படாமலும், மற்ற பிரிவினர் 22 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 31-ஆம் தேதி முடிய அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை கல்லூரி வளாகத்தில் உள்ள மையங்களில் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தோட்டக்கலை துணை இயக்குநர், தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், கூட்டூர் கிராமம், நெல்லுமாறு சாலை, தளி-635118, தோட்டக்கலை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் 624 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நவம்பர் முதல் வாரத்தில் அந்தந்த மையங்களில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இணையதளத்தை tnhorticulture.tn.gov.in அணுகலாம்.