அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
அதேவேளையில் 29 தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்காத நிலையும் உள்ளது. இதையடுத்து மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சதவீத மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது.
இதற்காக கல்வித்துறை அதிகாரிகள், நிபுணர்களைக் கொண்ட குழுவினர் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் அதிகளவிலான மாணவ, மாணவிகளைச் சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நிகழ் கல்வியாண்டு (2018-19) நிறைவடையவுள்ளது. பொதுவாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கல்வி ஆண்டு தொடக்கத்தில் ஜூன் மாதம் மேற்கொள்வதே வழக்கம்.
ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் இறுதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை தொடங்குவதற்கு முன்பே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர்.
எனவே, அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேருவதை உறுதிப்படுத்த வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மழலையர் வகுப்புகள் தொடங்கி பிளஸ் 2 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
சேர்க்கையின்போதே அனைத்து சான்றிதழ்களையும் பெற வேண்டிய அவசியமில்லை. பின்நாளில் வழங்கினால்கூட போதுமானது. மாணவர் சேர்க்கையை கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கும் ஏப்ரல் முதல் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.